Facebox Member•••1
Sakthi
Sakthi
10/11/2023, 9:28 am
ஜப்பானில் குப்பைத் தொட்டிகளோ அல்லது தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களோ இல்லை, ஆனால் எப்படி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது?

அன்றைய நாளின் வகுப்புகள் முடிந்து வீட்டுக்குப் புறப்படுவதற்காக மாணவ, மாணவியர்கள் புத்தகப் பைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

நாளைய வகுப்பு அட்டவணை பற்றி அவர்களுடைய ஆசிரியர் சில அறிவிப்புகள் செய்யும் நிலையில் அவர்கள் பொறுமையாகக் கவனிக்கின்றனர்.

பிறகு, மற்ற நாட்களைப் போல, ஆசிரியரின் இறுதி வார்த்தைகள் வருகின்றன: ``ஓ.கே. எல்லோரும் கவனியுங்கள். இன்றைய தூய்மைப் பணி பட்டியல். முதலாவது மற்றும் இரண்டாவது வரிசையினர் வகுப்பறையை சுத்தம் செய்வார்கள். மூன்று மற்றும் நான்காவது வரிசையினர் வெளியில் உள்ள வராந்தா மற்றும் படிக்கட்டுகளை சுத்தம் செய்ய வேண்டும். ஐந்தாவது வரிசையினர் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.''

ஐந்தாவது வரிசையில் இருந்து சில முனகல்கள் கேட்கின்றன. ஆனால் சிறுவர்கள் எழுந்து, வகுப்பறையின் பின்னால் அலமாரியில் இருந்து துடைப்பம், துணிகள் மற்றும் பக்கெட்களை எடுத்துக் கொண்டு கழிப்பறைகளை நோக்கிச் செல்கின்றனர்.

நாடு முழுக்க பள்ளிக்கூடங்களில் இதே காட்சிகள் நிகழ்கின்றன.

பொதுவாக ஜப்பானுக்கு முதன்முறையாக வருவோர்கள் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாததைக் கவனிக்கிறார்கள். தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களும் கிடையாது. எனவே அவர்களுக்குள் எழும் கேள்வி, ஜப்பான் எப்படி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது? என்பதுதான்.

குடியிருப்போர் தாங்களாகவே சுத்தம் செய்து அவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதுதான் இதற்கான பதில்.

``தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளி வரையில் 12 ஆண்டு கால பள்ளிக்கூட வாழ்க்கையில், சுத்தம் செய்யும் நேரம் என்பது மாணவர்களின் அன்றாட வாழ்வின் பகுதியாகிவிடுகிறது'' என்று ஹிரோஷிமா ப்ரிபெக்ட்சுரல் அரசு அதிகாரி மாய்கோ அவானே கூறுகிறார்.

``வீட்டு வாழ்க்கையிலும்கூட, நமக்கான இடத்தையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தவறுவது மோசமான பழக்கம் என்று பெற்றோர்கள் கற்பிக்கின்றனர்.''

பள்ளிக் கல்வித் திட்டத்தில் இதுபோன்ற சமூக விழிப்புணர்வு அம்சத்தை சேர்ப்பதால், தங்கள் சுற்றுப்புறம் குறித்து குழந்தைகள் விழிப்புணர்வு பெறுவதுடன், பெருமை கொள்ளவும் முடிகிறது.

``சில நேரங்களில் பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்ய நான் விரும்பியதில்லை'' என்று பகுதிநேர மொழி பெயர்ப்பாளர் சிக்கா ஹயாஷி நினைவுகூறுகிறார்.

``ஆனால் அது தினசரி பணிகளில் அடங்கியது என்பதால், நான் ஏற்றுக்கொண்டேன்.''

``பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்வது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும் என கற்றுக் கொள்வது முக்கியமானதாக உள்ளது.''

பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்ததும் மாணவர்கள் தங்கள் ஷூக்களை கழற்றி லாக்கர்களில் வைத்துவிட்டு, சாதாரண காலணிகளை அணிகின்றனர்.

வீடுகளிலும்கூட, தெருவில் அணிந்து வந்த காலணிகளை நுழைவாயிலில் விட்டுவிடுகின்றனர்.

வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களும் கூட, தங்கள் ஷூக்களை வெளியில் விட்டுவிடுகின்றனர்.

பள்ளிக் குழந்தைகள் வளரும் போது, அங்கு கற்றுக் கொள்ளும் விஷயங்கள் வகுப்பறையைத் தாண்டி தாங்கள் வாழும் பகுதி, தங்கள் நகரம், தங்கள் நாடு என விரிவடைகிறது.

சுத்தம் குறித்த ஜப்பானியர்களின் அக்கறையைக் காட்டும் சில உதாரணங்கள் வைரலாகி உள்ளன. ஏழே நிமிடங்களில் ஷின்கன்சென் ரயிலை சுத்தம் செய்யும் ஊழிர்கள் குறித்த விடியோ சுற்றுலாப் பயணிகளை தனக்கே உரிய வகையில் ஈர்க்கும் அம்சமாக மாறியது.

ஜப்பானின் கால்பந்து ரசிகர்களும் கூட சுத்தம் பற்றி அக்கறை காட்டுபவர்களாக உள்ளனர்.

பிரேசில் (2014) மற்றும் ரஷிய (2018) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின் போது, தங்கள் நாட்டு அணியின் ரசிகர்கள், ஆட்டம் முடிந்ததும் காத்திருந்து விளையாட்டு அரங்கை சுத்தம் செய்த காட்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்தன.

விளையாட்டு வீரர்களும்கூட, தங்களின் உடை மாற்றும் அறைகளை சுத்தமாக வைத்துவிட்டு தான் வெளியேறினர்.

Facebox Member•••2
Sakthi
Sakthi
10/11/2023, 9:30 am
புற்கள் பசுமையாக உள்ளன, சுத்தமாகவும் உள்ளன

"அனைத்து அணிகளுக்கும் எப்படிப்பட்ட எடுத்துக்காட்டு இது!" என்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பொது ஒருங்கிணைப்பாளர் பிரிசில்லா ஜன்ஸென்ஸ் ட்விட்டரில் இது பற்றி வியப்புடன் பதிவிட்டார்.

"மற்றவர்களின் பார்வையில் எங்களைப் பற்றிய மரியாதை எப்படி இருக்க வேண்டும் என்பதில், ஜப்பானியர்களான நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்'' என்று மாய்கோ அவானே கூறுகிறார். ``போதிய கல்வி கற்காதவர்கள் என்றோ, சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் கற்பிக்கப்படாத மோசமானவர்கள் என்றோ மற்றவர்கள் எங்களைப் பற்றி நினைத்துவிடக் கூடாது.''

ஜப்பானிய இசை விழாக்களிலும் இதேபோன்ற காட்சிகளைக் காண முடிகிறது.

ஜப்பானின் மிகப் பெரிய மற்றும் பழமையான இசை விழாவாகக் கருதப்படும் பியூஜி ராக் இசை விழாவில், ரசிகர்கள் தங்களின் குப்பைகளை கைகளிலேயே வைத்திருந்தனர். குப்பைத் தொட்டியைப் பார்த்து அதில் போடும் வரை கைகளில் வைத்திருந்தனர்.

புகைபிடிப்பவர்கள், அதன் சாம்பலை போடுவதற்கு கைகளிலேயே ஆஷ்டிரே எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். ``மற்றவர்களைப் பாதிக்கும் இடங்களில் புகைபிடிக்காமல் தவிர்க்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது என்று இசை விழாவின் இணையதளம் தெரிவிக்கிறது.

1969ல் பெருமளவு குப்பைகளுக்கு நடுவே நடைபெற்ற உட்ஸ்டாக் நிகழ்ச்சியில் இருந்து எந்த அளவுக்கு மாறுபட்டதாக இப்போது உள்ளது.

தினசரி வாழ்விலும் கூட சமூக விழிப்புணர்வின் உதாரணங்களைக் காண முடிகிறது.

உதாரணமாக, காலை 8 மணிக்கு, அலுவலக பணியாளர்களும், கடைகளின் பணியாளர்களும் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்கின்றனர்.

கண்ணுக்குத் தெரியாத தூசிகளும் கூட பிரச்சினைதான். எனவே, மாதந்தோறும் தூய்மைப் பணியில் ஈடுபடும் சிறுவர்கள், தங்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரிக்கின்றனர்.

குடியிருப்போரும் அவ்வப்போது தெருக்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். மக்கள் ஏற்கெனவே குப்பைகளை வீடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள் என்பதால், தெருக்களில் அவ்வளவாக குப்பைகள் சேர்வதில்லை.

கண்ணுக்குத் தெரியாத தூசிகள் - கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் - கவலையை ஏற்படுத்தும் மற்றொரு பிரச்சினையாக உள்ளன.

யாருக்காவது சளி அல்லது ஃப்ளூ பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுக்கு அது பரவிடாமல் தவிர்க்க, தாங்கள் முகத்துக்கு துணி (மாஸ்க்) அணிந்து கொள்கின்றனர்.

மற்றவர்கள் குறித்த அக்கறையில் மேற்கொள்ளும் இந்த சாதாரண அணுகுமுறையால், வைரஸ் பரவும் வாய்ப்பு குறைகிறது. அதன் தொடர்ச்சியாக பணி நாட்கள் இழப்பு ஏற்படுவதும், மருத்துவச் செலவுகளும் குறைகின்றன.

நூற்றாண்டு கால தூய்மை: ஜப்பானியர்கள் எப்படி இந்த அளவுக்கு தூய்மையில் அக்கறை கொண்டவர்களாக மாறினர்?

நிச்சயமாக இது புதியது அல்ல என்று வில்லியம் ஆடம்ஸ் என்ற கடலோடி குறிப்பிடுகிறார். 1600 களில் ஜப்பானில் பயணம் மேற்கொண்டவர் அவர். ஜப்பானில் காலடி வைத்த முதலாவது ஆங்கிலேயராகவும் அவரே இருந்தார்.

"மிகுந்த கவனத்துடன் தூய்மையைப் பராமரிப்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது" என்று ஆடம்ஸ் சாமுராய் வில்ஸியமின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிலெஸ் மில்ட்டன் குறிப்பிட்டுள்ளார். "தூய்மையான தெருக்கள் மற்றும் கழிப்பறைகள்" இருந்தன என்று அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தின் தெருக்களில் "அடிக்கடி கழிவுகள் வழிந்தோடும்'' காலத்தில் சென்ட் வாசனையுடன் கூடிய நீராவிக் குளியல் வசதிகள் இருந்தன என்றும் அவர் எழுதியுள்ளார்.

தனிநபர் தூய்மை குறித்து ஐரோப்பியர்கள் கவலைப்படாமல் இருப்பது குறித்து ஜப்பானியர்கள் "மிகவும் வருத்தமடைந்தனர்'' என்றும் கூறியுள்ளார்.

Facebox Member•••3
Sakthi
Sakthi
10/11/2023, 9:33 am
உடல் ஆரோக்கிய ஆபத்துகள்:
இந்த முன் யோசனையான செயல்பாடுகள் நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளால் உருவாகி இருக்கலாம்.

ஜப்பான் போன்ற வெப்பமான, ஈரப்பதம் மிக்க சூழ்நிலையில், உணவு சீக்கிரம் அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது, பாக்டீரியாக்கள் உருவாகி விடுகின்றன, சிறு பூச்சிகள் உருவாகின்றன.

எனவே, நல்ல தூய்மை என்பது நல்ல ஆரோக்கியம்.

ஆனால், அதைவிட ஆழமாக இது செல்கிறது.

சீனா மற்றும் கொரியாவில் இருந்து 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வந்த புத்த மதத்தின் மையக் கருத்தாக தூய்மை விஷயம் இருக்கிறது.

உண்மையில், 12 மற்றும் 13வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜப்பானுக்கு வந்த ஜென் புத்த மதத்தில் சுத்தம் செய்வது மற்றும் சமையல் செய்யும் தினசரி பணிகள் ஆன்மிகப் பயிற்சிகளின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இவை தியானத்தில் இருந்து மாறுபட்டவை அல்ல என்று குறிப்பிடப்படுகிறது.

``ஜென் தத்துவத்தைப் பொருத்த வரையில், சாப்பிடுவது மற்றும் நமது இடத்தை சுத்தம் செய்வது போன்ற அன்றாட செயல்பாடுகளும் புத்தமதப் பயிற்சிக்கான வாய்ப்புகளாகக் கருதப்பட வேண்டும் என்று புகுயமாவில் உள்ள ஷின்ஷோஜி ஆலயத்தின் நிர்வாகி எரிக்கோ குவகாக்கி கூறுகிறார்.

"தினசரி வாழ்வில் உடல் ரீதியிலும், ஆன்மிக ரீதியிலும் அழுக்கை சுத்தம் செய்வது முக்கிய பணிகளாகக் கருதப்படுகின்றன."

இருந்தாலும் அனைத்து பௌத்த நாடுகளிலும் ஜப்பான் போன்ற தூய்மை இல்லாதது ஏன்?

நல்லது. புத்த மதம் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, ஜப்பானில் - ஷின்டோ - என்ற மதம் இருந்தது (ஷின்டோ என்றால் `கடவுள்களின் வழி' என்று பொருள்).

ஷின்டோ -வின் முக்கிய விஷயமாக தூய்மை கருதப்படுகிறது.

தூய்மைப்படுத்தும் சடங்குகள்:
ஜப்பானியர்கள் ஏற்கெனவே கடைபிடித்து வந்த பழக்கத்தை மேலும் வலியுறுத்துவதாக பௌத்தம் அமைந்தது.

ஷின்டோவின் முக்கியமான கோட்பாடு கெகாரே (தூய்மையின்மை அல்லது அழுக்கு) என்பதாக, தூய்மைக்கு எதிரானதாக இருந்தது.

மரணம் மற்றும் நோய் என்பதில் தொடங்கி, ஏற்பில்லாத அனைத்து விஷயங்களும் தூய்மையற்றவை என கருதப்பட்டன.

தூய்மையின்மையை விரட்டுவதற்கு, அடிக்கடி தூய்மை சடங்குகள் அவசியமானதாக உள்ளது.

"தனி நபர் ஒருவர் தூய்மையின்மையால் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்" என்று ஹிரோஷிமாவின் கன்டா வழிபாட்டுத் தலத்தில் உதவி ஷின்டோ மத குருவான நோரியக்கி இகேடா கூறுகிறார்.

எனவே, தூய்மையை கடைபிடிப்பது முக்கியமானது. அது உங்களை தூய்மைப்படுத்துகிறது. சமூகத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதனால்தான் ஜப்பான் மிகவும் சுத்தமான நாடாக இருக்கிறது.

தொற்று நோய்களைப் பொருத்த வரையில், மற்றவர்களைப் பற்றிய இந்த அக்கறை, புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் குப்பைகளை பொறுக்குவது போன்ற சாதாரண விஷயங்களிலும் இதே நிலை கடைபிடிக்கப்படுகிறது.

தூய்மைப்படுத்தும் சடங்குகள் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கின்றன.

ஷின்டோ வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைவதற்கு முன், நுழைவாயிலில் உள்ள கல்லால் ஆன தொட்டியில் அனைவரும் கைகள் மற்றும் வாயை சுத்தம் செய்து கொள்கின்றனர்.

பல ஜப்பானியர்கள் தங்களின் புதிய கார்களை வழிபாட்டுத் தலத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அங்குள்ள மதகுரு இறகு போன்ற பொருளை, ஒனுசா என அவர்கள் குறிப்பிடும் பொருளை காரை சுற்றிலும் அசைத்து தூய்மை செய்கிறார்.

பிறகு காரின் கதவுகள், என்ஜின் பகுதி மற்றும் பின் பகுதியைத் திறந்து உள்பகுதிகளையும் தூய்மைப்படுத்துகிறார். பக்தர்களுக்கு இரு புறத்திலும் ஒனுசாவை அசைத்து அவர்களையும் மத குரு தூய்மைப்படுத்துகிறார்.

புதிய கட்டடம் கட்டப்பட உள்ள நிலத்தையும் அவர் தூய்மைப்படுத்துகிறார்.

நீங்கள் ஜப்பானில் வாழ்பவராக இருந்தால், சுத்தமான வாழ்க்கை முறைக்கு சீக்கிரமாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

பாடங்கள்: பொது இடங்களில் மூக்கு சிந்துவதை நிறுத்திவிடுவீர்கள். கடைகள் மற்றும் அலுவலகங்களில் வைக்கப் பட்டிருக்கும் சானிட்டைசர்களைப் பயன்படுத்துவீர்கள். வீட்டில் சேரும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய வசதியாக 10 வகையான குப்பைகளாகப் பிரிப்பதற்கு கற்றுக் கொள்வீர்கள்.

1600களில் ஜப்பானுக்கு வந்த வில்லியம் ஆடம்ஸ் மற்றும் அவருடைய குழுவினரைப் போல நீங்களும், வாழ்த்தைத் தரம் உயர்வதைக் காண்பீர்கள்.

நீங்கள் தாயகம் திரும்பும் போது, பொது இடத்தில் தும்முவோர் மற்றும் இருமுவோர், அழுக்கான ஷூக்களை வீட்டுக்குள் அணிந்து வருபவர்கள் காட்டுமிராண்டிகளாகத் தெரிவார்கள். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைவீர்கள். இவையெல்லாம் ஜப்பானில் நினைத்துப் பார்க்க முடியாதவை.

ஆனால், இன்னும் நம்பிக்கை உள்ளது. போக்மன், சுஷி மற்றும் காமிரா செல்போன்கள் உலகெங்கும் தடம் பதிக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது தானே!

•••4
Sponsored content

CREATE NEW TOPICInformation

ஜப்பான் சுத்தமாக இருப்பது எப்படி?

From Facebox ® Global Friendly

Topic ID: 527

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...