Facebox Member•••1
தமிழச்சி
தமிழச்சி
3/5/2022, 6:53 am
சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதலின் கதை!

1995 ஏப்ரல் 1.  சனிக் கிழமை முட்டாள்கள் தினத்தில்…

சென்னை சாந்தோம் ஜனதா கட்சி அலுவலகத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் பிரஸ் மீட்டுக்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. ’அதிரடியாக எதையாவது சொல்லி பரபரப்பைக் கிளப்புகிறவர்  சுப்பிரமணியன் சுவாமி’ என்பது ஊருக்கே தெரிந்தது. அப்படிதான், ’வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும்’ என நினைத்து பத்திரிகையாளர்கள் வந்திருந்தார்கள். ஆனால், அன்றைக்கு சுவாமி சொன்ன தகவல், இந்தியா ஊடகங்களுக்கான தலைப்பு செய்தி !

“முதலமைச்சர் ஜெயலலிதா மீது  வழக்குத் தொடர, ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற சிரித்துக் கொண்டே அதிர்ச்சி தகவலைச் சொன்னார் சுப்பிரமணியன் சுவாமி. ’’ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினத்தில் சுவாமி பிரஸ் மீட் நடத்தி, நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்’’ என நிருபர்கள் கமெண்ட் அடித்தனர். உடனே, சென்னா ரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலைச் செய்தியாளர்களிடம் சுவாமி கொடுத்த போது நிருபர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ’ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு. சுவாமிக்கு ஆளுநர் அனுமதி’ என்ற தலைப்பு செய்தி, அனைத்து பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துகளில் வெளியானது.  

’அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ எனச் சொல்லி, 1994 நவம்பரில் ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அந்த மனு மீது சென்னா ரெட்டி நடவடிக்கை எடுக்காத சூழலில், வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார் சுவாமி. அந்த வழக்கில், ’1995 மே மாதத்துக்குள் முடிவை அறிவிக்க வேண்டும்’ என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார்.

’’ஜெயலலிதா மீதான வழக்கு நேர்மையாக நடைபெற, முதல்வர் ஜெயலலிதா உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் விலகாவிட்டால் அரசியலில் தூய்மையைப் கடைப்பிடிக்க ஜெயலலிதாவை பதவியில் இருந்து நீக்கப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் சுவாமி.

’’முதல்வர் ஒரு அரசாங்க ஊழியர். அவர் மீதான புகாரை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் நீதிபதியை நியமிக்கலாம். அவரே மாநில முதல்வராக இருப்பதால் மத்திய அரசு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்’’ எனச் சொன்ன சுவாமி, அதற்கு ஆதாரமாக மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டார். ’’1982-ல் மகாராஷ்டிரா முதல்வர் அந்துலே மீது புகார் வந்தபோது, அவர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதித்தார். உடனே அந்துலேவை பதவி விலகும்படி காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி கேட்டுக் கொண்டார். இதனால், அந்துலே பதவி விலகினார். ஜெயலலிதா பதவி விலகாவிட்டால் அவரை நீக்கி, சட்டப்பேரவையின் செயல்பாட்டை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

ஜெயலலிதா மீது வழக்கு தொடர சுவாமிக்கு சென்னா ரெட்டி அனுமதி அளித்துத் தரப்பட்ட கடிதம் 1995 மார்ச் 25-ம் தேதி எழுதப்பட்டிருந்தது. அது, மார்ச் 31-ம் தேதி சுவாமியின் கைக்குக் கிடைத்தது. அடுத்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி அதனை ஊடகத்தில் பந்தி வைத்தார் சுவாமி. இரண்டரை பக்கம் கொண்ட அந்த கடிதத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி என்னதான் சொல்லியிருந்தார்?

’குற்றவியல் நடைமுறை விதி 197-வது பிரிவின் படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் 19-வது பிரிவின் படியும் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, 2.11.1993- ம் தேதி சுப்பிரமணியன் சுவாமி மனு அளித்தார். அதற்கு ஆதாரங்களாக இரண்டு தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை அளித்திருந்தார்.

நிலக்கரி இறக்குமதி டெண்டர் தொடர்பாகவும், அரசு நிறுவனமான டான்சி நிலத்தை முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்குக் குறைந்த விலைக்கு விற்றது தொடர்பாகவும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

அழகேந்திரன் பிரதர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்களின் குறிப்புகள் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஜெயா பப்ளிகேஷனில் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருப்பது பற்றிய ஒப்பந்தம், நிலம் வாங்கியதற்கான ஆவணம், 4.42 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் 1.82 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருப்பது பற்றிய விவரம் ஆகியவையும் அளிக்கப்பட்டிருந்தது.

சுப்பிரமணியன் சுவாமி சொன்ன குற்றச்சாட்டுகளையும் அதற்காக அளித்திருந்த ஆவணங்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா மீது இந்திய தண்டனைச் சட்டம் 169-வது பிரிவு, ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) D மற்றும் E ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குத் தொடர அனுமதி வழங்குகிறேன்’ என்று சென்னா ரெட்டி அந்த கடித்ததில் குறிப்பிட்டிருந்தார்.

’’லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த  வழக்கில், தாமதங்களைத் தவிர்க்க சிறப்பு நீதிமன்றம் வேண்டும். ஜெயலலிதா மட்டும் இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது சொன்னார் சுவாமி.

இதற்கு ஜொயலலிதாவின் ரியாக்சன் என்ன?...

Message reputation : 100% (7 votes)
Facebox Member•••2
தமிழச்சி
தமிழச்சி
3/5/2022, 7:15 am
சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதலின் கதை தொடர்ச்சி

போயஸ் கார்டனில் பிரளயம்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்த தகவல் கிடைத்ததும் போயஸ் கார்டனில் எரிமலை வெடித்தது.

பிரஸ் மீட்டுகளில் சுப்பிரமணியன் சுவாமி என்ன சொல்கிறார்? என்பதை அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க, மாநில உளவுத் துறையினர், கண்காணிப்பார்கள், சுவாமியின் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த உளவுத் துறையினர், பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்த நிருபர்களிடம் தகவலைக் கேட்டு வாங்கினார்கள். ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்த கடிதத்தின் நகல்கள் செய்தியாளர்களுக்குச் சுப்பிரமணியன் சுவாமி வழங்கியிருந்தார். அதனையும் நகல்கள் எடுத்துக் கொண்டார்கள்.

லேண்ட் லைன் தொலைபேசிகள் மட்டுமே இருந்த காலம்; பிரேக்கிங் நியூஸுக்கு சேட்டிலைட் சேனல்கள் இல்லாத சூழல் அது. அடித்துப் பிடித்து சாந்தோம் பக்கத்தில் இருந்த டி.ஜி.பி அலுவலகத்துக்கு ஓடி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தட்டினார்கள் உளவுத் துறையினர். அது, போயஸ் கார்டனை எட்டியது. தன் மீது வழக்கு தொடர ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளிப்பார் என்பதை ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை. சென்னா ரெட்டியின் கடித நகலை பார்த்ததும் கோபத்தில் கொந்தளித்தார் ஜெயா. ’’சவாலைச் சந்திப்பேன்’’ என உடனடியாக அறிக்கையின் மூலம் ரியாக்‌ஷன் காட்டினார் ஜெயலலிதா.

’சுப்பிரமணியன் சுவாமி சுமத்திய பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், என் மீது வழக்குத் தொடர ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கியிருக்கிறார். என்னுடைய பொது வாழ்வில் இதுவரை எத்தனையோ சோதனைகளையும், சவால்களையும் சந்தித்து இருக்கிறேன். ஆளுநரின் இந்த உத்தரவு, நான் சந்திக்க வேண்டிய மற்றொரு சவால். அவ்வளவுதான்!

இந்த சவால்களை எதிர்கொள்வதில் மக்களும் கட்சியினரும் எனக்குத் தொடர்ந்து அளித்து வந்த பேரன்பில் இருந்தும், பேராதரவில் இருந்தும் நான் எப்போதும் சக்தியையும் உற்சாகத்தையும் பெற்று வந்துள்ளேன். எனது வாழ்க்கையில் இவைதான் எனக்கு ஆக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் சக்திகள்.

மக்களும் கட்சியினரும் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, அவர்கள் என் மீது பொழியும் மாறா அன்பு, தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் துணையோடு, இந்தச் சவாலையும் நான் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எனது மனசாட்சி தெளிவாக உள்ளது. உரிய மன்றத்தில் எனது நிலை தெளிவாக்கப்பட்டு, நீதி கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது’ என ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.

அதோடு, கட்சியினருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். ‘இந்த விவகாரம் குறித்து, கட்சியினர் பதற்றம் அடையத் தேவையில்லை. அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்ப்போ, கண்டனமோ தெரிவித்து யாரும் எவ்வித சுவரொட்டிகளையோ விளம்பரங்களையோ அல்லது அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது. இது தொடர்பாக எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது’ என்றார். ஆனால், நடந்தது வேறு. சுப்பிரமணியன் சுவாமியும் சென்னா ரெட்டியும் அ.தி.மு.க வினரால் அர்ச்சிக்கப்பட்டார்கள். தாக்குதல் முயற்சியும் நடந்தேறின.

கட்சியினருக்கும் மக்களுக்கும் ஜெயலலிதா விளக்கம் சொல்லிவிட்டார். அடுத்து, வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்த விவகாரத்தில் இருந்து எப்படித் தப்புவது? எனக் கணக்குப் போட்டார். முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனுடன் ஜெயலலிதாவுக்கு நட்பு உண்டு. அவரிடம் ஜெயலலிதா ஆலோசனை கேட்டதாக அப்போது தகவல்கள் கசிந்தன. ’’ஆளுநர் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், அது பயன் அளிக்காது. பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை எதிர் கொள்ளுங்கள்’’ என ஆலோசனை சொன்னாராம். ஆனால், ஜெயலலிதா அதனை ஏற்கவில்லை....

Message reputation : 100% (7 votes)
Facebox Member•••3
தமிழச்சி
தமிழச்சி
3/5/2022, 7:30 am
சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதலின் கதைத் தொடர்ச்சி...

சுவாமியின் சிவப்பு சூட்கேஸ்!

சென்னை சாந்தோம், பாபநாசம் சிவன் சாலையில்தான் தமிழக ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் இருக்கிறது. அந்த ஆபிஸில் இருந்து 1995 மார்ச் 31-ம் தேதி இரவு பத்திரிகை அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. ''ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார், நாளை காலை 11 மணிக்கு பிரஸை பார்க்கிறார். ரிப்போர்டரை அனுப்புங்கள்'' என்றனர்.

அரசியல் தலைவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான அழைப்புகள் பத்திரிகை அலுவலகங்களுக்கு கிடைப்பதற்கு முன்பே, அந்த தகவல் உளவுத் துறையினருக்கும் தெரிந்துவிடும். ’ஆளுநர் சென்னா ரெட்டியின் அனுமதியைச் சுவாமி வெளியிடுவார்’ என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதனை உளவுத் துறையினரும் மோப்பம் பிடிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் அறிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் சொன்ன நேரத்தில் பிரஸ் மீட் ஆரம்பித்தது. சுப்பிரமணியன் சுவாமி வருவதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இனிப்பான செய்தி தரப் போகிறார் என்பது அந்த வினாடி வரையில் அங்கிருந்தவர்களுக்குத் தெரியாது. அன்றைக்கு தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால் ஸ்வீட் தருகிறார்கள் என நிருபர்கள் பேசிக் கொண்டார்கள். பத்திரிகையாளர் சந்திப்புக்குள் நுழைவதற்கு முன்பு, இரண்டு வி.ஐ.பி-களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் முன்னாள் அமைச்சர் க.இராசாராம்.

ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து, 1991 ஜூன் 26-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அவருடைய அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரத்துக்கு அடுத்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சராகப் பதவியேற்றவர் இராசாராம். நான்கு மாதம்தான் அவர் அமைச்சராகவே இருக்க முடிந்தது. 1991 அக்டோபர் 31-ம் தேதி ராசாராமை அமைச்சரவையில் இருந்து திடீரென்று நீக்கினார் ஜெயலலிதா. அதற்கு பின்னால் ஒரு கதை இருந்தது.

அன்றைக்கு பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் தான் உணவுத் துறையும் இருந்தது. ஜெயலலிதா பதவியேற்ற இரண்டே மாதங்களில் முதலமைச்சர் மற்றும் உணவு அமைச்சர்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டினார் நரசிம்மராவ். ஆனால், ஜெயலலிதா போகவில்லை. அவரது உரையை உணவு அமைச்சர் இராசாராம்தான் படித்தார்.

ஆந்திர முதல்வராக இருந்த காலத்திலிருந்தே நரசிம்மராவுடன் இராசாராமுக்கு நெருக்கம் அதிகம். அந்த நட்பில் பிரதமர் நரசிம்மராவை வீட்டில் சந்தித்தார். அது சர்ச்சை ஆகிவிட்டது. "பிரதமரைச் ஏன் சந்தித்தீர்கள்? அம்மாவுக்கு இது பிடிக்காதே...’’ என அமைச்சர் முத்துசாமி சொல்லி இருக்கிறார். ‘’ஜவஹர்லால் நேரு முதல் சந்திரசேகர் வரை எல்லாப் பிரதமர்களுடனும் நண்பராகப் பழகியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்காக ஏதாவது உதவிகள் கேட்டிருப்பேனே தவிர, எனக்கென எந்த உதவியையும் பிரதமரிடமும் கேட்டதில்லை. என் சந்திப்பு அம்மாவுக்கு நன்மைதான் பயக்கும்’’ என சொல்லியிருக்கிறார் இராசாராம். அப்போதைக்கு இராசாராம் மீது எந்த நடவடிக்கையும் ஜெயலலிதா எடுக்கவில்லை. ஆனால், அவர் மீதான கோபம் தணியவில்லை என்பது சில மாதங்களிலேயே தெரிந்தது.

அன்றைக்கு இந்தியாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிக் கொண்டிருந்தது. மீண்டும் இரண்டு மாதங்களில் அதேபோன்று உணவு மாநாடு... இந்த முறை தன் உரையைப் படிக்க அரங்கநாயகத்தை அனுப்பினார் ஜெயலலிதா. மாநாட்டில் தேநீர் இடைவேளையில் தன்னோடு தேநீர் அருந்த இராசாராமை அழைத்தார் பிரதமர் நரசிம்மராவ். நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளதை இராசாராமிடம் எடுத்துரைத்தார். "முதலமைச்சர்கள் கூடியுள்ள இந்த மாநாட்டில் இந்த பிரச்னையை எடுத்து வைத்தால், ஒரு நல்ல முடிவு ஏற்படுமே" எனச் சொல்லியிருக்கிறார் இராசாராம். உடனே நிதியமைச்சர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதார நிலையை மாநாட்டில் விளக்கினார்.

இதுபற்றி முதல்வர்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பாகப் பேசுவதற்காக அமைச்சர்கள் இராசாராமும் எஸ்.டி.சோமசுந்தரமும் இருந்தனர். ‘’இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்’’ என எஸ்.டி.சோமசுந்தரம் எச்சரித்தார். "நாடாளுமன்றத்திலும் அமைச்சர் பொறுப்புக்களிலும் நாம் இருந்திருக்கிறோம். இதில், கருத்து சொல்லாமல் இருந்தால் எப்படி சரியாக இருக்கும்?’’ என சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்திருக்கிறார் இராசாராம்.

’’நாடு கடுமையான பொருளாதார சிக்கலில் உள்ளது. பிரதமர் நரசிம்மராவ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்கிறோம். மன்னன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி என்பது போல நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என்றார் இராசாராம். நிதிச் செயலாளர் கீதா கிருஷ்ணன் இராசாராமிடம் ஓடிவந்து, "பிரதமரும் நிதி அமைச்சரும் தங்களுக்கு நன்றி சொல்ல சொன்னார்கள்" என்றார்.

பிரதமர் நரசிம்மராவை இராசாராம் ஆதரித்துப் பேசியதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. இராசாராமின் அமைச்சர் பதவி பறிபோனது. டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்குத் திரும்பினார் இராசாராம். வழக்கத்துக்கு மாறாக விமான நிலையத்தில் இராசாராமின் மகனும் அவருடைய தம்பியும் நின்று கொண்டிருந்தார்கள். ‘’அண்ணன் ஜெயசீலனுக்கு உடல்நலக் குறைவா? இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்கள்?’’ என கேட்டிருக்கிறார் இராசாராம். "உனக்கு விஷயமே தெரியாதா? அமைச்சரவையில் இருந்து உன்னை நீக்கிட்டாங்க’’ என அவர்கள் சொன்னார்கள்.

அடுத்து சில மாதங்களில் இராசாராமைக் கட்சியில் இருந்தே கட்டம் கட்டினார் ஜெயலலிதா. கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்கும் போது ஒரே உத்தரவில் நீக்கும் ஜெயலலிதா, இராசாராமை நீக்க நெடுஞ்செழியன், மதுசூதனன் உள்ளிட்ட 13 பேர்களிடம் கையெழுத்து வாங்கி நீக்கினார். இராசாராம் வீட்டு முன்பு நின்ற கார்கள் அடித்து உடைக்கப்பட்டன. வீட்டின் மீது சோடா பாட்டில்கள் வீசப்பட்டன.

‘’நீங்கள் யாருடனும் சண்டைக்குப் போனதில்லை. உங்கள் முதற் சண்டையை நாட்டின் சேமத்துக்காகத் தொடங்குங்கள். வெற்றி உண்டாகுவதாக" என அவருக்கு வேண்டப்பட்ட மகான் ஒருவர் ஆசீர்வதித்தார். உடனே டெல்லிக்கு வி.வி.சாமிநாதனுடன் கிளம்பினார். அங்கே ஆதரவுக்கு ஒருவரைத் தேடினார்கள். கடைசியில் சுப்பிரமணியன் சுவாமியிடம் உதவி கேட்டனர். அவரும். நேசக்கரம் நீட்டினார். ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சியை எதிர்த்து, போராட ஆரம்பித்தார் இராசாராம்.

அடுத்த வி.ஐ.பி அ.தி.மு.க முன்னாள் எம்.பி டாக்டர் ஸ்ரீதரன்.

1991 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியிலிருந்து அ.தி.மு.க எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் டாக்டர் ஸ்ரீதரன், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் கடத்தல் வழக்கில் ஸ்ரீதரன் திடீரென கைதானார், அ.தி.மு.க எம்.பி ஒருவரே கைதானது ​​அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. அவரது கட்சியே அவரை சிக்க வைத்துவிட்டது என சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. சுப்பிரமணியன் சுவாமி பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் இந்த சம்பவம் நடந்தது.

முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடர ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்தது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக்குச் சுப்பிரமணியன் சுவாமி வந்தபோது, அவருக்கு இரண்டு பக்கமும் இராசாராமும் ஶ்ரீதரும் உடன் வந்தனர். பிரஸ் மீட் ஆரம்பித்ததும் நிருபர்களுக்கு தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார் சுவாமி. சிவப்பு நிற சூட்கேஸை எடுத்து வந்திருந்தார். அதை திறந்து ஜெராக்ஸ் நகல்களை நிருபர்களுக்கு வழங்கிய சுவாமி, ’’ஜெயலலிதா மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்புக்கு நான் மேற்கொண்ட தளராத முயற்சிக்கு ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி கொடுத்திருக்கிறார்’’ என்றார். இதனைக் கேட்டதும் அலுவலகத்தில் இருந்த ஜனதா கட்சியினர் ஆர்ப்பரித்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். ஜனதா கட்சியின் தமிழக தலைவர் சந்திரலேகா, ’’இது சுவாமிக்குக் கிடைத்த வெற்றி’’ என்றார். ’’எனக்கு எங்கப்பா ஸ்வீட்’’ என ஸ்ரீதர் எம்.பி. கேட்டு வாங்கி இனிப்பை சாப்பிட்டார்.

இந்த கொண்டாட்டம் எல்லாம் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த உளவுத் துறையினருக்கு எட்டியது. பாபநாசம் சிவன் சாலைக்கும் டி.ஜி.பி அலுவலகத்துக்கும் இடையே இருந்த தூரம் ஒரு கிலோ மீட்டர்தான். உடனே சிட்டாய் பறந்து தங்கள் பிக்பாஸிடம் தகவலைச் சொன்னார்கள் உளவுத் துறையினர்....

Message reputation : 100% (7 votes)
•••4
Sponsored content

CREATE NEW TOPIC



Information

சென்னா ரெட்டி – ஜெயலலிதா மோதலின் கதை!

From Facebox ® Global Friendly

Topic ID: 488

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...