Facebox Member•••1
Krishna
Krishna
25/11/2021, 3:11 pm
ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.

அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருபமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

CREATE NEW TOPIC



Information

சிவன் மீது சித்தம் வைத்த அம்மணி அம்மாள்

From Facebox ® Global Friendly

Topic ID: 389

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...