Facebox Member•••1
தமிழச்சி
தமிழச்சி
2/8/2020, 2:04 pm
"ஆடிப்பெருக்கும் வரலாறும்!"

தமிழ்நாட்டின் நதிகள் வெறும் நீரோடும் ஆறுகள் அல்ல. அவை தமிழரின் அடையாளம்; பண்பாடு. ஆறுகளை போற்றி வழிபடும் நாள் ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கு திருவிழாவை தமிழர்கள் வெகு நெடுங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, காவிரிப் பாசன பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது இந்திய நாட்டின் எல்லா நீர்நிலைகளும் கங்கை தான் என்று கருதப்படுவது போல - தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் - ஆடி பதினெட்டாம் நாளில், அங்கெல்லாம் உள்ள நீர்நிலைகள் காவிரித் தாயாகவே அடையாளம் காணப்படும் நாள் இதுவாகும் (குறிப்பாக டெல்டா மாவட்டங்களின் மக்கள் அப்படித்தான் கருதுகின்றனர்).

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள், காலம்தோரும் நிகழும் வரலாற்று நிகழ்வுகளையும் - அந்த பாரம்பரிய விழாவுடன் இணைத்துக்கொள்கின்றன. அதனால்தான், ஒரே விழாவுக்கு பலவிதமான கதைகள் கூறப்படுகின்றன.

பதினெட்டு நாள் போரின் முடிவாக கொண்டாடுதல், தொன்ம நம்பிக்கை விளைவாக தாலியை கழற்றி ஆற்றில் விட்டு புதிதாக தாலி கட்டுதல், காவிரித்தாய் கடல்ராசனை மணமுடிக்க செல்வதாகக் கருதி காதோலை, கருகமணிகளை ஆற்றில் விடுதல், ஆடிப்பட்டம் தேடி விதை என உழவர்களுக்கு வழிகாட்டுதல் என பல வடிவங்களில் - ஆடி பதினெட்டாம் நாளினை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவற்றில் ஒரு தொன்மம், வன்னியர்களின் வரலாற்றுடன் தொடர்புடையது ஆகும்.

வட தமிழகத்தின் வரலாறும் ஆடிப்பெருக்கும்!

ஆடி பதினெட்டாம் நாளினை கடலூர் மாவட்டத்தில் 'பதினெட்டாம் போர்' என்று குறிப்பிடுவார்கள். ஆடி மாதம் ஒன்றாம் நாளில் தொடங்கிய மகாபாரதப் போர், ஆடி 18 ஆம் நாளில் முடிந்ததாகவும் - அன்று திரௌபதியின் சபதம் ஈடேரும் வகையில் துரியோதன் கொலை செய்யப்பட்டதை கொண்டாடுவதாகவும் கூறுவார்கள்.

துரியோதனனுக்கு வாய்க்கரிசியாக, பச்சரிசியில் சர்க்கரை கலந்து படைப்பதும், மணமான பெண்கள், தங்களது தாலியை கழற்றிவிட்டு, புதிதாக தாலிக்கட்டிக் கொள்வதும் மரபாகும். புதிதாக திருமணம் ஆனவர்கள் கூட, ஆடி 18 வரை காத்திருந்து, அன்றைய தினத்தில் தாலியை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த ஆடிப்பதினெட்டு சடங்குகள் ஒரு நீண்ட வரலாற்றின் தொடர்ச்சியாகும்.

திரௌபதி: பல்லவர் - சாளுக்கியர் போர்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும்.

பல்லவ மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்ம பல்லவன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான். பல்லவர்கள் மாபெரும் வெற்றிபெற்றார்கள். பல்லவர்களின் வெற்றிக் கல்வெட்டு, இப்போதும் பாதாமி கோவிலில் இருக்கிறது. (பாதாமி - கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).

கல்கியின் சிவகாமி சபதம் வரலாற்றுக் கதையும் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன் திரைப்படமும் இந்த வரலாற்றைத்தான் குறிப்பிடுகின்றன.

வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான்.

பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின. 1400 ஆண்டுகள் கடந்தும் வடதமிழ்நாட்டு மக்கள் - பாரதம் படிப்பதையும், திரௌபதி அம்மன் திருவிழாவையும் அக்னி வசந்தவிழாவையும், துரியோதனன் படுகளம் நிகழ்வையும் நடத்தி வருகிறார்கள். இப்போதும் கூட "பதினெட்டம் போர்" எனும் தெருக்கூத்து நாடகங்கள் நடைபெறுகின்றன.

வன்னிய புராணம் எனும் போர் ஆவணம்

தமிழ் மன்னர்கள் நிகழ்த்திய போர்களின் வரலாறும் - வன்னிய புராணமும் ஒரே நிகழ்வின் இருவேறு வடிவங்கள் ஆகும். வன்னிய புராணத்தில் காணப்படும் போர் நிகழ்வுகளும் தமிழ் மன்னர்களின் மாநிலம் கடந்த, நாடுகள் கடந்த, கடல் கடந்த போர்களும் ஒரே சம்பவங்கள்தான்.

வன்னிய புராணத்திலும் 'புலிகேசி மன்னனின் வாதாபியை அழிப்பதுதான்' முதன்மையாக இருக்கிறது. வாதாபி சூரனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது.

தாலியை அறுத்துக்கட்டும் பழக்கம்

வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன். வாதாபியை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.

போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர்.

திரௌபதி - வன்னியராசன் - ஆடிப்பெருக்கு

வன்னியர்கள் வாழும் பகுதிகளில் வன்னியபுராணத்தின் மிச்சங்களும், திரௌபதி வழிபாடும் இப்போதும் நீடிக்கிறது.

ஒன்றுடன் ஒன்றாக கலந்துவிட்ட இந்த நீண்ட வரலாற்றின் ஒரு அடையாளமாகவே, இப்போதும் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் - பதினெட்டாம் போர் என்றும், தாலியை புதிதாக அணிவது என்றும் - பழைய மரபுகள் இன்னமும் தொடர்கின்றன.

இத்தகைய மரபு விழாக்கள்தான் தமிழ் சமூகத்திற்கான ஒரு பொது மனநிலையையும் ஒற்றுமையையும் உருவாக்குகிறன்றன. வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டாடுவோம்.

CREATE NEW TOPIC



Information

ஆடிப்பெருக்கு வரலாறு

From Facebox ® Global Friendly

Topic ID: 285

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Facebox

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

Site Statistics

Recommended Content

This function is growing...